7

1 அலிஃப், லாம், மீம், ஸாத்.
2 (நபியே!) இதன் மூலம் நீர் எச்சரிக்கை செய்வதற்காகவும் முஃமின்களுக்கு நல்லுபதேசமாகவும் உமக்கு அருளப்பட்ட வேதமாகும்(இது). எனவே இதனால் உமது உள்ளத்தில் எந்த தயக்கமும் ஏற்பட வேண்டாம்.
3 (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்; அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்; நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள்.
4 (பாவிகள் வாழ்ந்து வந்த) எத்தனையோ ஊர்களை நாம் அழித்திருக்கிறோம்; நமது வேதனை அவர்களை(த் திடீரென) இரவிலோ அல்லது (களைப்பாறுவதற்காகப்) பகலில் தூங்கிக்கொண்டிருக்கும் போதோ வந்தடைந்தது.
5 நமது வேதனை அவர்களுக்கு ஏற்பட்டபோது, அவர்கள்; "நிச்சயமாக நாம் அநியாயக்காரர்களாக இருந்தோம்" என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் கூறவில்லை.
6 யாருக்கு (நம்) தூதர்கள் அனுப்பப்பட்டார்களோ அவர்களைத் திடனாக விசாரணை செய்வோம். இன்னும் (நம்) தூதர்களையும் திடனாக விசாரிப்போம்.
7 ஆகவே, (பூரணமாக நாம்) அறிந்திருக்கிறபடி (அது சமயம்) அவர்களிடம் சொல்லிக் காண்பிப்போம்; (அவர்கள் செய்ததை விட்டும்) நிச்சயமாக நாம் மறைவாக இருக்கவில்லை.
8 அன்றைய தினம் (அவரவரின் நன்மை தீமைகளை) எடைபோடுவது உறுதி; அப்போது யாருடைய (நன்மையின்) எடை கனத்ததோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.
9 யாருடைய (நன்மையின்) எடை (குறைந்து) இலேசாக இருக்கின்றதோ, அவர்கள் நம் வசனங்களுக்கு மாறுசெய்த காரணத்தால், அவர்கள் தமக்கு தாமே நஷ்டம் விளைவித்துக் கொண்டவர்கள் ஆவார்கள்.
10 (மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் - எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்.
11 நிச்சயமாக நாமே உங்களைப் படைத்தோம்; பின்பு உங்களுக்கு உருக்கொடுத்தோம். அதன்பின், "ஆதமுக்கு ஸுஜுது செய்யுங்கள் (சிரம் பணியுங்கள்)" என்று மலக்குகளிடம் கூறினோம்; இப்லீஸைத் தவிர (மற்ற மலக்குகள்) யாவரும் (அவருக்குத்) தலைவணக்கம் செய்தார்கள்; அவன் (மட்டும்) தலைவணக்கம் செய்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை.
12 "நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான்.
13 "இதிலிருந்து நீ இறங்கிவிடு, நீ பெருமை கொள்வதற்கு இங்கு இடமில்லை, ஆதலால் (இங்கிருந்து) நீ வெளியேறு - நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்" என்று அல்லாஹ் கூறினான்.
14 "(இறந்தவர்) எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக" என அவன் (இப்லீஸ்) வேண்டினான்.
15 (அதற்கு அல்லாஹ்) "நிச்சயமாக நீ அவகாசம் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவனாவாய்" என்று கூறினான்.
16 (அதற்கு இப்லீஸ்) "நீ என்னை வழி கெட்டவனாக (வெளியேற்றி) விட்டதன் காரணத்தால், (ஆதமுடைய சந்ததியரான) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில் (செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில்) உட்கார்ந்து கொள்வேன்" என்று கூறினான்.
17 "பின் நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப்பக்கத்திலும், அவர்கள் இடப்பக்கத்திலும் வந்து (அவர்களை வழி கெடுத்துக்) கொண்டிருப்பேன்; ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலோரை (உனக்கு) நன்றி செலுத்துவோர்களாகக் காணமாட்டாய்" (என்றும் கூறினான்).
18 அதற்கு இறைவன், "நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும் இங்கிருந்து வெளியேறி விடு - அவர்களில் உன்னைப் பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்" என்று கூறினான்.
19 (பின்பு இறைவன் ஆதமை நோக்கி;) "ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப்பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்" (என்று அல்லாஹ் கூறினான்).
20 எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, "அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை" என்று கூறினான்.
21 "நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்" என்று சத்தியம் செய்து கூறினான்.
22 இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் - அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது - அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு; "உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?" என்று கேட்டான்.
23 அதற்கு அவர்கள்; "எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.
24 (அதற்கு இறைவன், "இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்; உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" என்று கூறினான்.
25 "அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்" என்றும் கூறினான்.
26 ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
27 ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் - நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.
28 (நம்பிக்கையில்லாத) அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டால், "எங்கள் மூதாதையர்களை இதன் மீதே கண்டோம்; இன்னும் அல்லாஹ் எங்களை அதைக்கொண்டே ஏவினான்" என்று சொல்கிறார்கள். "(அப்படியல்ல!) நிச்சயமாக அல்லாஹ் மானக்கேடான செயல்களைச் செய்யக் கட்டளையிடமாட்டான் - நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறுகிறீர்களா?" என்று (நபியே!) நீர் கேட்பீராக.
29 "என் இறைவன், நீதத்தைக் கொண்டே ஏவியுள்ளான்; ஒவ்வொரு தொழுகையின் போதும் உங்கள் முகங்களை அவன் பக்கமே நிலைப்படுத்திக்கொள்ளுங்கள்; வணக்கத்தை அவனுக்கே தூய்மையாக்கியவர்களாக அவனை அழையுங்கள்; உங்களை அவன் துவக்கியது போலவே (அவனிடம்) நீங்கள் மீளுவீர்கள்" என்று நீர் கூறும்.
30 ஒரு கூட்டத்தாரை அவன் நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டதாருக்கு வழிகேடு உறுதியாகி விட்டது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள் - எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என்று எண்ணுகிறார்கள்.
31 ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.
32 (நபியே!) நீர் கேட்பீராக "அல்லாஹ் தன் அடியார்களுக்காக வெளிப்படுத்தியுள்ள (ஆடை) அழகையும், உணவு வகைகளில் தூய்மையானவற்றையும் தடுத்தது யார்?" இன்னும் கூறும்; "அவை இவ்வுலக வாழ்க்கையில் நம்பிக்கையாளர்களுக்கு (அனுமதிக்கப்பட்டவையே, எனினும் மறுமையில்) அவர்களுக்கு மட்டுமே சொந்தமானவையாகவும் இருக்கும்" இவ்வாறு நாம் நம் வசனங்களை அறியக்கூடிய மக்களுக்கு விவரிக்கின்றோம்.
33 "என் இறைவன் ஹராம் எனத் தடுத்திருப்பவையெல்லாம், வெளிப்படையான அல்லது அந்தரங்கமான, மானக்கேடான செயல்கள்,பாவங்கள்;, நியாயமின்றி (ஒருவருக்கொருவர்) கொடுமை செய்வது ஆதாரமில்லாமலிருக்கும் போதே நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல், நீங்கள் அறியாவற்றை அல்லாஹ்வின் மீது (பொய்யாகக்) கூறுவது (ஆகிய இவையே என்று நபியே!) நீர் கூறுவீராக.
34 ஒவ்வோரு கூட்டதாருக்கும் (வாழ்வுக்கும், வீழ்வுக்கும்) ஒரு காலக்கெடு உண்டு, அவர்களுடைய கெடு வந்துவிட்டால் அவர்கள் ஒருகணப் பொழுதேனும் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள்.
35 ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள்.
36 ஆனால் நம் வசனங்களை பொய்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்வளோ அவர்கள் நரகவாசிகளேயாவார்கள் - அதில் அவர்கள் (என்றென்றும்) தங்கி விடுவார்கள்.
37 எவன் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்து அவனுடைய வசனங்களையும் நிராகரிக்கிறானோ, அவனைவிட மிக அநியாயக்காரன் யார்? எனினும் அத்தகையவர்களுக்கு அவர்களுக்கு விதிக்கப்பட்ட (உணவும், பொருள்களிலுள்ள) பங்கு (இவ்வுலகில்) கிடைத்துக்கொண்டே இருக்கும்; நம்முடைய (வான) தூதர்கள் அவர்களிடம் வந்து, அவர்(களுடைய உயிர்)களைக் கைப்பற்றும் போது (அவ்வான தூதர்கள்) "அல்லாஹ்வை விட்டு எவர்களை அழைத்துக் கொண்டு இருந்தீர்களோ, அவர்கள் எங்கே?" எனக் கேட்பார்கள்; (அதற்கு) "அவர்கள் எங்களை விட்டுக் காணாமல் (மறைந்து போய்) விட்டார்கள்" என்று கூறி மெய்யாகவே தாம் நிராகரிப்பவர்களாக - இருந்ததாகத் தங்களுக்கு எதிராகவே அவர்கள் சாட்சி கூறுவார்கள்.
38 (அல்லாஹ்) கூறுவான்; "ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்." ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி, "எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு" என்று சொல்வார்கள். அவன் கூறுவான்; "உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு - ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்."
39 அவர்களில் முன் வந்தவர்கள், பின் வந்தவர்களை நோக்கி, "எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட (தீ) வினையின் காரணமாக நீங்களும் (இருமடங்கு) வேதனையை அனுபவியுங்கள்" என்று கூறுவார்கள்.
40 எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.
41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
42 ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ - எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் - அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள்.
43 தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்; "இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்" (இதற்கு பதிலாக, "பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்" என்று அழைக்கப்படுவார்கள்.
44 சுவர்க்க வாசிகள், நரக வாசிகளை அழைத்து, "எங்களுக்கு எங்கள் இறைவன் அளித்திருந்த வாக்குறுதியை நிச்சயமாகவும், உண்மையாகவும் பெற்றுக் கொண்டோம்; உங்களுக்கு உங்கள் இறைவன் அளித்த வாக்குறுதியை நீங்கள் உண்மையில் பெற்றுக் கொண்டீர்களா?" என்று கேட்பார்கள். அதற்கு அவர்கள், "ஆம் (பெற்றுக் கொண்டோம்" என்பார்கள். அப்போது அவர்களுக்கிடையே அறிவிப்பவர் ஒருவர், "அக்கிரமக்காரர்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாவதாக!" என்று அறிவிப்பார்.
45 (ஏனெனில்) அவர்கள் அல்லாஹ்வின் (நேர்)வழியைவிட்டு (மனிதர்களைத்) தடுத்து, அதைக் கோணலாக்கவும் விரும்பினர்; மேலும் அவர்கள் மறுமையையும் (நம்பாது) மறுத்தனர்.
46 (நரகவாசிகள், சுவர்க்க வாசிகள் ஆகிய) இவர்களுக்கிடையே ஒரு திரை(யான மதில்) இருக்கும்; அதன் சிகரங்களில் அநேக மனிதர்கள் இருப்பார்கள்; (நரக வாசிகள், சுவர்க்க வாசிகள்) ஒவ்வொருவரையும் அவர்களுடைய அடையாளங்களைக் கொண்டு அறிந்து கொள்வார்கள்; அவர்கள் சுவர்க்க வாசிகளை அழைத்து "ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகுக!)" என்று கூறுவார்கள்; அவர்கள் இன்னும் சுவர்க்கத்தில் நுழையவில்லை - அவர்கள் (அதில் நுழைய) ஆவலுடன் இருக்கின்றார்கள்.
47 அவர்களுடைய பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், அவர்கள் "எங்கள் இறைவனே! எங்களை (இந்த) அக்கரமக்காரர்களுடனே ஆக்கி விடாதே" என்று கூறுவார்கள்.
48 சிகரங்களிலிருப்பவர்கள், சில மனிதர்களை - அவர்கள் அடையாளங்களால் அறிந்து கொண்டு - அவர்களைக் கூப்பிட்டுக் கூறுவார்கள்; "நீங்கள் உலகத்தில் சேமித்து வைத்திருந்தவையும், நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தவையும், உங்களுக்குப் பலனளிக்கவில்லையே!"
49 "அல்லாஹ் இவர்களுக்கு அருள்புரிய மாட்டான் என்று நீங்கள் சத்தியம் செய்து கூறிக்கொண்டிருந்தீர்களே அவர்கள் இவர்கள் தானே? (என்று சுவனவாசிகளைச் சுட்டிக் காண்பித்து,) நீங்கள் சுவனபதியில் நுழையுங்கள்; உங்களுக்கு எவ்வித பயமுமில்லை நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்" என்றும் கூறுவார்கள்.
50 நரகவாசிகள், சுவர்க்கவாசிகளை அழைத்து, "தண்ணீரில் கொஞ்சமேனும் அல்லது அல்லாஹ் உங்களுக்கு அளித்துள்ள உணவில் சிறிதேனும் எங்களுக்குக் கொடுங்கள்" எனக் கேட்பார்கள்; அதற்கு அவர்கள்; "நிச்சயமாக அல்லாஹ் இவ்விரண்டையும் காஃபிர்கள் மீது தடுத்து (ஹராம் ஆக்கி) விட்டான்" என்று கூறுவார்கள்.
51 (ஏனென்றால்) அவர்கள் தங்களுடைய மார்க்கத்தை வீணாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டார்கள்; இன்னும் அவர்களை இவ்வுலக வாழ்க்கை மயக்கி விட்டது எனவே அவர்கள் நம் வசனங்களை நிராகரித்து இந்த இறுதி நாளின் சந்திப்பை மறந்து விட்டது போன்று, இன்று நாம் அவர்களை மறந்து விடுகிறோம்.
52 நிச்சயமாக நாம் அவர்களுக்கு ஒரு வேதத்தை கொடுத்தோம். அதை நாம் பூரண ஞானத்தைக் கொண்டு விளக்கியுள்ளோம்; அது நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நேர் வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
53 இவர்கள் (தங்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டு வந்த) இறுதியையன்றி வேறு எதையும் எதிர்பார்க்கிறார்களா? அந்தத் தண்டனை நாள் வந்தபொழுது, இதற்குமுன் அதனை முற்றிலும் மறந்திருந்த இவர்கள், "நிச்சயமாக எங்கள் இறைவனின் தூதர்கள் சத்திய(வேத)த்தையே கொண்டு வந்தனர், எங்களுக்குப் பரிந்து பேசக்கூடியவர்கள் எவரும் இருக்கின்றனரா? அவ்வாறாயின் அவர்கள் எங்களுக்காகப் பரிந்து பேசட்டும்; அல்லது நாங்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்படுவோமா? அப்படியாயின், நாங்கள் முன்செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டு வேறு (நன்மைகளையே) செய்வோம்" என்று கூறுவார்கள் - நிச்சயமாக அவர்கள் தமக்குத் தாமே இழப்புக்கு ஆளாக்கிக் கொண்டார்கள், அவர்கள் கற்பனை செய்து வந்தவை அவர்களை விட்டு மறைந்து விடும்.
54 நிச்சயமாக உங்கள் இறைவனாகிய அல்லாஹ் தான் ஆறு நாட்களில் வானங்களையும், பூமியையும் படைத்துப் பின் அர்ஷின் மீது தன் ஆட்சியை அமைத்தான் - அவனே இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; அவ்விரவு பகலை வெகு விரைவாக பின் தொடர்கிறது இன்னும் சூரியனையும்; சந்திரனையும், நட்சத்திரங்களையும் தன் கட்டளைக்கு - ஆட்சிக்குக் - கீழ்படிந்தவையாக(ப் படைத்தான்); படைப்பும், ஆட்சியும் அவனுக்கே சொந்தமல்லவா? அகிலங்களுக்கெல்லாம் இறைவனாகிய (அவற்றைப் படைத்து, பரிபாலித்துப் பரிபக்குவப்படுத்தும்) அல்லாஹ்வே மிகவும் பாக்கியமுடையவன்.
55 (ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்கவளை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.
56 (மேலும்,) பூமியில் (அமைதி உண்டாகி) சீர்திருத்தம் ஏற்பட்ட பின்னர் அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள்; அச்சத்தோடும் ஆசையோடும் அவனை பிரார்த்தியுங்கள் - நிச்சயமாக அல்லாஹ்வின் அருள் நன்மை செய்வோருக்கு மிக சமீபத்தில் இருக்கிறது.
57 அவன் தான், தன்னுடைய அருள் (மாரிக்)கு முன், நற்செய்தியாக (குளிர்ந்த) காற்றுகளை அனுப்பிவைக்கிறான் அவை கனத்த மேகங்களைச் சுமக்கலானதும் நாம் அவற்றை இறந்து கிடக்கும் (வரண்ட) பூமியின் பக்கம் ஓட்டிச் சென்று, அதிலிருந்து மழையைப் பொழியச் செய்கின்றோம்; பின்னர் அதைக் கொண்டு எல்லாவிதமான கனிவகை (விளைச்சல்)களையும் வெளிப்படுத்துகின்றோம் - இவ்வாறே நாம் இறந்தவர்களையும் எழுப்புவோம். (எனவே இவற்றை யெல்லாம் சிந்தித்து) நீங்கள் நல்லுணர்வு பெறுவீர்களாக.
58 (ஒரே விதமான மழையைக் கொண்டே) வளமான பூமி தன் இறைவன் கட்டளையைக் கொண்டு (செழுமையாகப்) பயிர் (பச்சை)களை வெளிப்படுத்துகிறது ஆனால் கெட்ட களர் நிலம் சொற்பமான விளைச்சலையே வெளிப்படுத்துகிறது நன்றி செலுத்தும் மக்களுக்கு இவ்வாறே நாம் வசனங்களை விவரிக்கின்றோம்.
59 நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர்(தம் கூட்டத்தாரிடம்), "என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனைப்பற்றி அஞ்சுகிறேன் என்று கூறினார்.
60 அவருடைய கூட்டத்தாரிலுள்ள தலைவர்கள், "மெய்யாகவே, நாங்கள் உம்மை பகிரங்கமான வழிகேட்டில் தான் திடமாக பார்க்கிறோம்" என்று கூறினார்கள்.
61 அதற்கு (நூஹு) "என் கூட்டத்தார்களே! என்னிடம் எந்த வழிகேடும் இல்லை மாறாக அகிலங்களின் இறைவனாகிய (அல்லாஹ்வின்) தூதனாகவே நான் இருக்கின்றேன்" என்று கூறினார்.
62 "நான் என் இறைவனுடைய தூதையே உங்களுக்கு எடுத்துக் கூறி; உங்களுக்கு நற்போதனையும் செய்கின்றேன் - மேலும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்விடமிருந்து நான் அறிகிறேன்" (என்று கூறினார்).
63 உங்களை எச்சரிப்பதற்காகவும் நீங்கள் அஞ்சி நடப்பதற்காகவும் உங்களுக்கு அருள் புரியப்பட வேண்டுமென்பதற்காகவும் உங்களைச் சேர்ந்த ஒரு மனிதர் மீது உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை உங்களுக்கு வருவதைப் பற்றி நீங்கள் ஆச்சரியப்படுவீர்களா?
64 அப்போதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினர்; எனவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம்; இன்னும் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறியவர்களை (பிரளயத்தில்) மூழ்கடித்தோம்; நிச்சயமாக அவர்கள் (உண்மை காண முடியா) குருட்டுக் கூட்டதாராகவே இருந்தனர்.
65 இன்னும், ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சதோரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்;) அவர், "என் சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனையன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை - நீங்கள் (அவனுக்கு) அஞ்சி(ப் பேணி) நடக்க வேண்டாமா?" என்று கேட்டார்.
66 அவருடைய சமூகத்தாரில் நிராகரித்தவர்களின் தலைவர்கள், (அவரை நோக்கி) "நிச்சயமாக நாங்கள் உம்மை மடமையில் (மூழ்கிக்கிடப்பவராகவே) காண்கின்றோம்; மேலும் நிச்சயமாக நாம் உம்மைப் பொய்யர்களில் ஒருவராகக் கருதுகிறோம்" என்று கூறினார்கள்.
67 அதற்கு அவர்? "என் சமூகத்தாரே! எந்த மடமையும் என்னிடம் இல்லை - மாறாக, அகிலங்களின் இறைவனாகிய - (அல்லாஹ்வின்) தூதன் ஆவேன்" என்று கூறினார்.
68 "நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன்" (என்று கூறினார்).
69 "உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிகமாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள்" (என்றும் கூறினார்)
70 அதற்கு அவர்கள் " எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்" என்று கூறினார்கள்.
71 அதற்கு அவர், "உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.
72 ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.
73 ஸமூது´ கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார்.
74 இன்னும் நினைவு கூறுங்கள்; ´ஆது´ கூட்டத்தாருக்குப் பின் உங்களைப் பூமியில் பின் தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான். அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே நீங்கள் அல்லாஹ்வின் இந்த அருட்கொடைகளை நினைவு கூறுங்கள். பூமியில் குழப்பம் செய்பவர்களாகக் கெட்டு அலையாதீர்கள்" (என்றும கூறினார்).
75 அவருடைய சமூகத்தாரில், (ஈமான் கொள்ளாமல்) பெருமையடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் பலஹீனர்களாக கருதப்பட்ட ஈமான் கொண்டவர்களை நோக்கி; "நிச்சயமாக ஸாலிஹ் அவருடைய இறைவனிடமிருந்து அனுப்பப்பட்ட தூதரென நீங்கள் உறுதியாக அறிவீர்களோ?" எனக் கேட்டார்கள் - அதற்கு அவர்கள், "நிச்சயமாக நாங்கள் அவர் மூலம் அனுப்பப்பட்ட தூதை நம்புகிறோம்" என்று (பதில்) கூறினார்கள்.
76 அதற்கு பெருமையடித்துக் கொண்டிருந்தவர்கள்; "நீங்கள் எதை நம்புகின்றீர்களோ, அதை நிச்சயமாக நாங்கள் நிராகரிக்கின்றோம்" என்று கூறினார்கள்.
77 பின்னர், அவர்கள் அந்த ஒட்டகத்தை அறுத்து தம் இறைவனின் கட்டளையை மீறினர்; இன்னும் அவர்கள் (ஸாலிஹை நோக்கி); "ஸாலிஹே நீர் (இறைவனின்) தூதராக இருந்தால், நீர் அச்சறுத்துவதை எம்மிடம் கொண்டு வாரும்" என்று கூறினார்கள்.
78 எனவே, (முன்னர் எச்சரிக்கப்பட்டவாறு) அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளிலேயே இறந்தழிந்து கிடந்தனர்.
79 அப்பொழுது, (ஸாலிஹ்) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும் "என்னுடைய சமூகத்தாரே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி, "உங்களுக்கு நற்போதனையும் செய்தேன்; ஆனால் நீங்கள் நற்போதனையாளர்களை நேசிப்பவர்களாக இல்லை" என்று கூறினார்.
80 மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ முனைந்தீர்கள்?"
81 "மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."
82 நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கிறார்கள். இவர்களை உங்கள் ஊரைவிட்டும் வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும்) அவரது சமுதாயத்தின் பதிலாக இருக்கவில்லை.
83 எனவே, நாம் அவரையும், அவருடைய மனைவியைத்தவிர, அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின் தங்கி விட்டாள்.
84 இன்னும் நாம் அவர்கள் மீது (கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம், ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்ன ஆயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக.
85 மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடை சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்) அவர் (தம் கூட்டத்தாரை நோக்கி,) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான (அத்தாட்சி) வந்துள்ளது அளவை முழுமையாக அளந்து, எடையைச் சரியாக நிறுத்துக் கொடுங்கள். மனிதர்களுக்கு அவர்களுக்கு உரிய பொருட்களை (கொடுப்பதில்) குறைத்து விடாதீர்கள்; பூமியில் சீர் திருத்தம் ஏற்பட்ட பின்னர், அதில் குழப்பம் உண்டாக்காதீர்கள், நீங்கள் முஃமின்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையாக இருக்கும்" என்று கூறினார்.
86 "மேலும், நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டவர்களை பயமுறுத்தி, (அவர்களை) அல்லாஹ்வின் பாதையை விட்டுத்தடுத்து, அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள்; நீங்கள் சொற்பத் தொகையினராக இருந்தீர்கள்; அவன் உங்களை அதிக தொகையினராக்கினான் என்பதையும் நினைவு கூறுங்கள் - குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னுவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக" (என்றும் கூறினார்).
87 "உங்களில் ஒரு பிரிவினர், எதனுடன் நான் அனுப்பப்பட்டுள்ளேனோ அதை நம்புகிறார்கள்; இன்னும் மற்றோர் பிரிவினர் (அதை) நம்பவில்லை - அல்லாஹ் நம்மிடையே தீர்ப்புக் கூறும் வரை பொறுமையாக இருங்கள் - அவனே தீர்ப்பளிப்பவர்களில் மிகவும் மேலானவன்" (என்றும் கூறினார்).
88 அவருடைய சமூகத்தினரில் பெருமை அடித்துக் கொண்டிருந்த தலைவர்கள் (அவரை நோக்கி), "ஷுஐபே! உம்மையும் உம்முடன் ஈமான் கொண்டவர்களையும், நிச்சயமாக நாங்கள் எங்கள் ஊரைவிட்டே வெளியேற்றி விடுவோம்; அல்லது நீர் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பி விடவேண்டும்" என்று கூறினார்கள் - அதற்கவர், "நாங்கள் (உங்கள் மார்க்கத்தை) வெறுப்பவர்களாக இருந்தாலுமா?" என்று கேட்டார்.
89 "உங்கள் மார்க்கத்தை விட்டு; அலலாஹ் எங்களைக் காப்பாற்றி விட்டபின், உங்கள் மார்க்கத்திற்கு நாங்கள் தீரும்பினால், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது பொய்க்கற்பனை செய்தவர்களாகி விடுவோம்; எங்கள் இறைவன் (தன்) ஞானத்தால் எல்லாப் பொருட்களையும் சூழ்ந்திருக்கின்றான்- அல்லாஹ்வின் மீதே நாங்கள் பரிபூரண நம்பிக்கை வைத்துள்ளோம்" (என்று கூறி), "எங்கள் இறைவா! எங்களுக்கும், எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக - தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்" (என்றும் பிரார்த்தித்தார்).
90 அவருடைய சமுகத்தாரில் காஃபிராகயிருந்தவர்களின் தலைவர்கள் (மற்றவர்களை நோக்கி), "நீ;ங்கள் ஷுஐபை பின் பற்றுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவீர்கள்" என்று கூறினார்.
91 ஆகவே அவர்களை பூகம்பம் பிடித்துக் கொண்டது அதனால் அவர்கள் (காலையில்) தம் வீடுகளில், இறந்தழிந்து கிடந்தனர்.
92 ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் தம் வீடுகளில் (ஒரு பொழுதும்) வாழ்ந்திராகவர்களைப் போல் ஆகிவிட்டனர் - ஷுஐபை பொய்ப்பித்தவர்கள் - (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களாகி விட்டார்கள்.
93 இதனால் (ஷுஐபு) அவர்களை விட்டு விலகிக்கொண்டார்; மேலும், "என் சமூகத்தவர்களே! மெய்யாகவே நான் உங்களுக்கு என் இறைவனுடைய தூதை எடுத்துக் கூறி வந்தேன், உங்களுக்கு நற்போதனையும் செய்தேன் - ஆனால் நிராகரிக்கும் மக்களுக்காக நான் எவ்வாறு கவலைப்படுவேன்" என்று அவர் கூறினார்.
94 நாம் நபிமார்களை அனுப்பி வைத்த ஒவ்வோர் ஊரிலுள்ள மக்களையும், (அம் மக்கள்) பணிந்து நடப்பதற்காக, நாம் அவர்களை வறுமையாலும், பிணியாலும் பிடிக்காமல் (சோதிக்காமல்) இருந்ததில்லை.
95 பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்; நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன" என்று (அலட்சியமாகக்) கூறினார்கள் - ஆகையால் அவர்கள் உணர்ந்து கொள்ளாத நிலையில் அவர்களைத் திடீரென (வேதனையைக் கொண்டு) பிடித்தோம்.
96 நிச்சயமாக அவ்வூர்வாசிகள் ஈமான் கொண்டு அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்திருந்தால், நாம் அவர்களுக்கு வானத்திலிருந்தும் பூமியிலிருந்தும் - பரகத்துகளை - பாக்கியங்களைத் திறந்து விட்டிருப்போம்; ஆனால் அவர்கள் (நபிமார்களை நம்பாது) பொய்ப்பித்தனர், ஆகவே அவர்கள் செய்து கொண்டிருந்த (பாவத்)தின் காரணமாக நாம் அவர்களைப் பிடித்தோம்.
97 அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
98 அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா?
99 அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்ட வாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.
100 பூமியில் (வாழ்ந்து போனவர்களுக்குப் பின்னால்), அதனை வாரிசாகப் பெற்ற இவர்களையும், நாம் நாடினால், இவர்களுடைய பாவங்களின் காரணத்தால் (அவ்வாறே) தண்டிப்போம் என்பது இவர்களுக்கு தெளிவாகவில்லையா? நாம் இவர்களுடைய இதயங்களின் மீது முத்திரையிட்டு விட்டோம்; எனவே இவர்கள் (நற்போதனைகளுக்குச்) செவிசாய்க்க மாட்டார்கள்.
101 (நபியே!) இவ்வூரார்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறுகிறோம்; நிச்சயமாக அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள், எனினும் அவர்கள் முன்னால் பொய்யாக்கிக் கொண்டிருந்த காரணத்தினால் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை - இவ்வாறே அல்லாஹ் காஃபிர்களின் இதயங்கள் மீது முத்திரையிட்டு விடுகிறான்.
102 அவர்களில் பெரும்பாலோருக்கு வாக்குறுதியை (நிறைவேற்றும் தன்மை இருப்பதாக) நாம் காணவில்லை - அன்றியும் அவர்களில் பெரும்பாரோரைப் பாவிகளாகவே கண்டோம்.
103 அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!
104 "ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்" என்று மூஸா கூறினார்.
105 "அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் - ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை" (என்றும் அவர் கூறினார்).
106 அதற்கு அவன், "நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் - நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்" என்று கூறினான்.
107 அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் - உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
108 மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் - உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
109 ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், "இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!" என்று கூறினார்கள்.
110 (அதற்கு, ஃபிர்அவ்ன்), "இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?" (என்று கேட்டான்.)
111 அதற்கவர்கள், "அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டினங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!
112 "அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்" என்று கூறினார்கள்.
113 அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், "நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?" என்;று கேட்டார்கள்.
114 அவன் கூறினான்; "ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்."
115 "மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?" என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
116 அதற்கு (மூஸா), "நீங்கள் (முதலில்) எறியுங்கள்" என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மக்தான சூனியத்தை செய்தனர்.
117 அப்பொழுது நாம் "மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்" என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
118 இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன.
119 அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.
120 அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து
121 "அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் ஈமான் கொண்டோம்;
122 "அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்" என்று கூறினார்கள்.
123 அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) "உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் ஈமான் கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் - இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் - இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!
124 "நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்" என்ற கூறினான்.
125 அதற்கு அவர்கள் "(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம்; (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)" என்று கூறினார்கள்.
126 "எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து எந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?" என்று கூறி "எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!" (எனப் பிரார்தித்தனர்.)
127 அதற்கு, ஃபிர்அவ்னின் சமூகத் தலைவர்கள் (அவனை நோக்கி) "மூஸாவும் அவருடைய சமூகத்தாரும் பூமியில் குழப்பம் உண்டாக்கி, உம்மையும் உம் தெய்வங்களையும் புறக்கணித்து விடும்படி நீர் அவர்களை விட்டு வைப்பீரா?" என்று கேட்டார்கள். அதற்கு அவன், "(அவ்வாறன்று!) நாம் அவர்களுடைய ஆண் மக்களை வெட்டிக் கொண்றுவிட்டு, (அவர்களைச் சிறுமைப் படுத்துவதற்காக) அவர்களுடைய பெண் மக்களை மட்டும் உயிருடன் வாழவிடுவோம் - நிச்சயமாக நாம் அவர்கள் மீது பூரண ஆகிக்கம் பெற்றுள்ளோம்" என்று கூறினான்.
128 மூஸா தம் சமூகத்தாரிடம்; "அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்; இன்னும் பொறுமையாகவும் இருங்கள்; நிச்சயமாக (இந்த) பூமி அல்லாஹ்வுக்கே சொந்தம் - தன் அடியார்களில், தான் நாடியவர்களுக்கு அவன் அதை உரியதாக்கி விடுகின்றான் - இறுதி வெற்றி, பயபக்தியுடையவர்களுக்கே கிடைக்கும்" என்று கூறினார்.
129 "நீர் எங்களிடம் வருவதற்கு முன்னரும் (துன்பப்பட்டோம்;) நீர் வந்த பின்னரும் துன்பப்படுகிறோம்" என்று அவர்கள் கூறினார்கள். அதற்கவர் கூறினார்; "உங்கள் இறைவன் உங்களுடைய பகைவர்களை அழித்து, உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைக்கக்கூடும்; நீங்கள் எவ்வாறு நடந்து கொள்கிறீர்கள் என்பதை அவன் கவனித்துக் கொண்டிருக்கின்றான்."
130 பின்னர் நாம் ஃபிர்அவ்னுடைய கூட்டத்தாரைப் பஞ்சம் பிடிக்கச் செய்து, விவசாயப் பலன்களைக் குறைத்துத் தண்டித்தோம் - அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக.
131 அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், "அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்" என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்; அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.
132 அவர்கள் மூஸாவிடம், "நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை" என்று கூறினார்கள்.
133 ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.
134 தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் "மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்" என்று கூறினார்கள.
135 அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்.
136 ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.
137 எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.
138 நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக்கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், "மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித்தருவீர்களாக!" என்று வேண்டினர்; "நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்" என்று மூஸா (அவர்களிடம்) கூறினார்.
139 "நிச்சயமாக இந்த மக்கள் ஈடுபட்டிருக்கும் மார்க்கம் அழியக் கூடியது இன்னும் அவர்கள் செய்பவை யாவும் (முற்றிலும்) வீணானவையே" (என்றும் கூறினார்).
140 "அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாக தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும்விட மேன்மையாக்கி வைத்துள்ளான்" என்றும் அவர் கூறினார்.
141 இன்னும் நினைவு கூறுங்கள்; ஃபிர்அவ்னின் கூட்டத்தாரிடமிருந்து நாம் உங்களைக் காப்பாற்றினோம்; அவர்கள் உங்களுக்குக் கொடிய வேதனைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்; அவர்கள் உங்கள் ஆண் மக்களைக் கொலை செய்துவிட்டு, (உங்களைச் சிறுமைப்படுத்துவதற்காக) உங்கள் பெண் மக்களை உயிருடன் வாழவிட்டார்கள்; இதில் உங்களுக்கு உஙகள் இறைவனிடமிருந்து ஒரு பெரும் சோதனை ஏற்பட்டிருந்தது.
142 மூஸாவுக்கு நாம் முப்பது இரவுகளை வாக்களித்தோம்; பின்னர், மேலும் அதை பத்து (இரவுகளைக்) கொண்டு பூர்த்தியாக்கினோம்; இவ்hவறாக அவருடைய இறைவன் (வாக்களித்த) காலக்கெடு நாற்பது இரவுகளாக முழமை பெற்றது. அப்போது மூஸா தம் சதோதரர் ஹாரூனை நோக்கி, "நீங்கள் என்னுடைய சமூகத்தாருக்கு, என் கலீஃபாவாக இருந்து, (அவர்களைத்) திருத்துவீர்களாக! குழப்பமுண்டாக்குபவரின் வழியைப் பின் பற்றாதிருப்பீர்களாக!" என்று கூறினார்.
143 நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா "என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், "மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!" என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், "(இறைவா!) நீ மிகவும் பரிசத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்" என்று கூறினார்.
144 அதற்கு அவன், "மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை என் தூதுவத்தைக் கொண்டும் (உம்முடன் நேரில்) நான் பேசியதைக் கொண்டும், (உம்மை) மனிதர்களிலிருந்து (மேலானவராக இக்காலை) தேர்ந்து எடுத்துள்ளேன் - ஆகவே நான் உமக்குக் கொடுத்ததை (உறுதியாகப்) பிடித்துக் கொள்ளும்; (எனக்கு) நன்றி செலுத்துபவர்களில் (ஒருவராகவும்) இருப்பீராக" என்று கூறினான்.
145 மேலும் நாம் அவருக்கு பலகைகளில், ஒவ்வொரு விஷயம் பற்றிய நல்லுபதேசங்களையும், (கட்டளைகளையும்,) ஒவ்வொன்றைப் பற்றிய விளக்கங்களையும் எழுதி; "அவற்றை உறுதியாகப் பற்றிப் பிடிப்பீராக! இன்னும் உம்முடைய சமூகத்தாரை அவற்றில் அழகானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு கட்டளையிடுவீராக! அதிசீக்கிரம் பாவிகளின் தங்குமிடத்தை நான் உங்களுக்கு காட்டுவேன்" (என்று கூறினான்).
146 எவ்வித நியாயமுமின்றி, பூமியில் பெருமையடித்து நடப்பவர்களை, என் கட்டளைகளை விட்டும் திருப்பி வைத்து விடுவேன்; அவர்கள் எல்லா அத்தாட்சிகளையும் கண்ட போதிலும் அவற்றை நம்ப மாட்டார்கள்; அவர்கள் நேர் வழியைக் கண்டால் அதனைத் (தங்களுக்குரிய) வழியென ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் - ஆனால் தவறான வழியைக் கண்டால், அதனை(த் தங்களுக்கு நேர்) வழியென எடுத்துக் கொள்வார்கள்; ஏனெனில் அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறினார்கள். இன்னும் அவற்றைப் புறக்கணித்தும் இருந்தார்கள்.
147 எவர்கள் நம் வசனங்களையும், (அத்தாட்சிகளையும்) மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யெனக் கூறுகின்றார்களோ அவர்களுடைய நற்கருமங்கள் யாவும் அழிந்துவிடும்; அவர்கள் எவ்வாறு செயல்பட்டார்களோ அதற்குத்தகுந்த கூலியைத் தவிர வேறு எதைப் பெற முடியும்?
148 மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள்.
149 அவர்கள் செய்துவிட்ட தவறு பற்றி கைசேதப் பட்டு, நிச்சயமாக தாங்களே வழி தவறி விட்டதை அறிந்து கொண்ட போது, அவர்கள்; "எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.
150 (இதனையறிந்த) மூஸா தன் சமூகத்தாரிடம் கோபத்துடன், விசனத்துடன் திரும்பி வந்த போது; (அவர்களை நோக்கி) "நான் இல்லாத சமயத்தில் நீங்கள் செய்த இக்காரியம் மிகவும் கெட்டது உங்கள் இறைவனுடைய கட்டளை (வேதனை)யைக் (கொண்டு வர) அவசரப்படுகிறீர்களா?" என்று கூறினார்; பின்னர் வேதம் வரையப் (பெற்றிருந்த) பலகைகளை எறிந்து விட்டு, தம் சதோதரர் (ஹாரூன்) உடைய தலை(முடி)யைப் பிடித்துத் தம் பக்கம் இழுத்தார். அப்போது (ஹாரூன்) "என் தாயின் மகனே! இந்த மக்கள் என்னை பலஹீனப்படுத்தி என்னை கொலை செய்யவும் முற்பட்டனர். ஆகவே (என்னுடைய) "பகைவர்களுக்கு என்மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விடாதீர்" இன்னும் என்னை அநியாயக் காரக் கூட்டத்தாருடன் சேர்த்துவிடாதீர்" என்று கூறினார்.
151 "என் இறைவனே! என்னையும் என் சகோதரரையும் மன்னிப்பாயாக! உன் ரஹ்மத்தில் (நற்கிருபையில்) - பிரவேசிக்கச் செய்வாயாக! ஏனெனில், நீயே கிருபையாளர்களிலெல்லாம், மிக்க கிருபையாளன்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.
152 நிச்சயமாக எவர்கள் காளைக் கன்றை (இறைவனாக) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை, அவர்கள் இறைவனிடமிருந்து கோபமும், இவ்வுலக வாழ்க்கையில் இழிவும் சீக்கிரமே வந்து சேரும்;. பொய்க் கற்பனை செய்பவர்களுக்கு நாம் இவ்வாறே கூலி கொடுப்போம்.
153 ஆனால் தீய செயல்கள் செய்து கொண்டிருந்தோர் (மனந்திருந்தி), தவ்பா செய்து (பாவங்களிலிருந்து விலகி உண்மையாக) நம்பிக்கை கொண்டால் - நிச்சயமாக அதன்பின் உம்முடைய இறைவன் மன்னிப்பவனாகவும், மிக்க கிருபை செய்பவனாகவுமிருக்கின்றான்.
154 மூஸாவை விட்டும் கோபம் தனிந்த போது, (அவர் எறிந்து விட்ட) பலகைகளை எடுத்துக் கொண்டார் - அவற்றில் வரையப்பெற்ற குறிப்புகளில் தம் இறைவனுக்குப் பயப்படுபவர்களுக்கு நேர் வழியும், (இறை) கிருபையும் இருந்தன.
155 இன்னும் மூஸா நாம் குறிப்பிட்ட நேரத்தில் (தூர் மலையில்) நம்மைச் சந்திப்பதற்காக, தம் சமூகத்தாரிலிருந்து எழுபது ஆண்களைத் தேர்ந்தெடுத்தார்; அவர்களைப் பூகம்பம் பற்றிக்கொண்டபோது, அவர், "என் இறைவனே! நீ கருதியிருந்தால், இதற்கு முன்னரே அவர்களையும் என்னையும் நீ அழித்திருக்கலாமே! எங்களிலுள்ள அறிவிலிகள் செய்த (குற்றத்)திற்காக, எங்கள் யாவரையும் நீ அழித்துவிடுகிறாயா? இது உன்னுடைய சோதனையேயன்றி வேறில்லை இதைக்கொண்டு நீ நாடியவர்களை வழிதவற விடுகிறாய்; இன்னும் நீ நாடியவர்களை நேர் வழியில் நடத்துகிறாய். நீ தான் எங்களுடைய பாதுகாவலன். ஆகவே எங்களுக்கு மன்னிப்பு அளிப்பாயாக! எங்களுக்கு கிருபை செய்வாயாக. மன்னிப்பவர்களிலெல்லாம் நீ தான் மிக்க மேன்மையானவன்" என்று பிரார்த்தித்தார்.
156 "இன்னும் இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்" (என்றும் பிரார்த்தித்தார்). அதற்கு இறைவன், "என்னுடைய அருளானது எல்லாப் பொருள்களிலும் (விரிந்து, பரந்து) சூழ்ந்து நிற்கிறது எனினும் அதனை பயபக்தியுடன் (பேணி) நடப்போருக்கும், (முறையாக) ஜகாத்து கொடுத்து வருவோருக்கும் நம்முடைய வசனங்களை நம்புகிறவர்களுக்கும் நான் விதித்தருள் செய்வேன்" என்று கூறினான்.
157 எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; தூய்மையான ஆகாரங்களையே அவர்களுக்கு ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார்; அவர்களுடைய பளுவான சுமைகளையும், அவர்கள் மீது இருந்த விலங்குகளையும்,(கடினமான கட்டளைகளையும்) இறக்கிவிடுவார்; எனவே எவர்கள் அவரை மெய்யாகவே நம்பி, அவரைக் கண்ணியப்படுத்தி, அவருக்கு உதவி செய்து, அவருடன் அருளப்பட்டிருக்கும் ஒளிமயமான (வேதத்)தையும் பின் பற்றுகிறார்களோ, அவர்கள் தாம் வெற்றி பெறுவார்கள்.
158 (நபியே!) நீர் கூறுவீராக "மனிதர்களே! மெய்யாக நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறேன்; வானங்கள், பூமி ஆகியவற்றின் ஆட்சி அவனுக்கே உரியது, அவனைத்தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறுயாருமில்லை - அவனே உயிர்ப்பிக்கின்றான்; அவனே மரணம் அடையும்படியும் செய்கின்றான் - ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள்; நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்."
159 உண்மையைக் கொண்டு நேர்வழி பெற்று அதன் மூலம் நீதியும் செலுத்துகின்றவர்களும் மூஸாவின் சமுதாயத்தில் உள்ளனர்.
160 ஸல்வாவையும் (மேலான உணவாக) இறக்கிவைத்து "நாம் உங்களுக்கு அளித்துள்ள தூயவற்றிலிருந்து புசியுங்கள்" (என்று சொன்னோம்; அவ்வாறு இருந்தும் அவர்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்தார்கள்), அவர்கள் நமக்கு ஒன்றும் தீங்கிழைக்கவிலலை தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
161 இன்னும் அவர்களை நோக்கி; "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; ´ஹித்ததுன்´ (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது
162 அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வெறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம்.
163 (நபியே!) கடற்கரையிலிருந்த (ஓர்) ஊர் மக்களைப்பற்றி நீர் அவர்களைக் கேளும் - அவர்கள் (தடுக்கப்பட்ட ஸப்து) சனிக்கிழமையன்று வரம்பை மீறி (மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள்; ஏனென்றால் அவர்களுடைய சனிக்கிழமையன்று (கடல்) மீன்கள், அவர்களுக்கு(த் தண்ணீருக்கு மேலே தலைகளை வெளியாக்கி)க் கொண்டு வந்தன - ஆனால் சனிக்கிழமையல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு வெளியாக்கி) வருவதில்லை - அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக அவர்களை நாம் இவ்வாறு சோதனைக் குள்ளாக்கினோம்.
164 (அவ்வூரிலிருந்த நல்லடியார் சிலர் அறிவுரை சொன்ன போது) அவர்களில் சிலர், "அல்லாஹ் எவர்களை அழிக்கவோ, அல்லது கடினமான வேதனைக்குள்ளாக்கவோ நாடியிருக்கிறானோ, அந்த கூட்டத்தார்களுக்கு நீங்கள் ஏன் உபதேசம் செய்கிறீர்கள்?" என்று கேட்டார்கள்; அதற்கு (அந்த நல்லடியார்கள்); "எங்கள் இறைவனிடம் (நம்) பொறுப்பிலிருந்து நீங்கி விடுவதற்காகவும் இன்னும் அவர்கள் (ஒருவேளை தாங்கள் செய்து வருவதிலிருந்து) விலகிவிடலாம் என்பதற்காகவும் (நாங்கள் உபதேசம் செய்கிறோம்) என்று கூறினார்கள்."
165 அவர்கள் எது குறித்து உபதேசிக்கப் பட்டார்களோ, அதனை அவர்கள் மறந்து விட்டபோது, அவர்களைத் தீமையைவிட்டு விலக்கிக் கொண்டிருந்தவர்களை நாம் காப்பாற்றினோம்; வரம்பு மீறி அக்கிரமம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு, அவர்கள் செய்து வந்த பாவத்தின் காரணமாக கடுமையான வேதனையைக் கொடுத்தோம்.
166 தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறிவிடவே, "நீங்கள் இழிவடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று அவர்களுக்கு நாம் கூறினோம்.
167 (நபியே!) அவர்களுக்குக் கொடிய வேதனை கொடுக்க கூடியவர்களையே, அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துமாறு கியாம நாள் வரை நாம் செய்வோமென்று உங்கள் இறைவன் அறிவித்ததை (அவர்களுக்கு நினைவூட்டுவீராக) - நிச்சயமாக உம் இறைவன் தண்டனையளிப்பதில் தீவிரமானவன் - ஆனால் நிச்சயமாக அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், கிருபையாளனாகவும் இருக்கின்றான்.
168 அவர்களை நாம் பூமியில் பல பிரிவினராகச் (சிதறித்திரியுமாறு) ஆக்கி விட்டோம்; அவர்களில் நல்லவர்களுமிருக்கின்றார்கள். அதுவல்லாத கெட்டவர்களும் இருக்கின்றார்கள் - அவர்கள் (நன்மையின் பால்) திரும்பும் பொருட்டு அவர்களை நன்மைகளைக் கொண்டும், தீமைகளைக் கொண்டும் சோதித்தோம்.
169 அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தை (தகுதியற்ற) ஒரு பிரிவினர் அடைந்தனர்; அவர்கள் வேதத்திற்கும் வாரிசுகள் ஆனார்கள்;. இவ்வுலகின் அற்பப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு (அதற்கு தகுந்தபடி வேதத்தை மாற்றி கொண்டார்கள்). ´எங்களுக்கு மன்னிப்பு அளிக்கப்படும்´ என்றும் கூறிக்கொள்கிறார்கள். இதுபோன்று வேறோர் அற்பப்பொருள் அவர்களுக்கு வந்து விட்டால், அதையும் எடுத்துக் கொள்வார்கள், "அல்லாஹ்வின் மீது உண்மையேயன்றி வேறு ஒன்றும் கூறலாகாது என்று வேதத்தின் மூலம் அவர்களிடம் உறுதிமொழி வாங்கப் படவில்லையா?" (இன்னும்) அதிலுள்ளவை (போதனைகளை) அவர்கள் ஓதியும் வருகின்றார்கள்; (அதையெல்லாம் அவர்கள் பொருட்படுத்துவதில்லை) பயபக்தியுடையவர்களுக்கு மறுமையின் வீடே மேலானதாகும். நீங்கள் (நல்லவிதமாக) அறிந்து கொள்ள வேண்டாமா?
170 எவர்கள் வேதத்தை உறுதியாகப் பற்றிப்பிடித்துக் கொண்டு, தொழுகையையும் நிலைநிறுத்துகிறார்களோ (அத்தகைய) நல்லோர்களின் கூலியை நாம் நிச்சயமாக வீணாக்க மாட்டோம்.
171 நாம் (ஸினாய்) மலையை அவர்களுக்கு மேல் முகட்டைப்போல் உயர்த்தினோம்; அப்போது அவர்கள் அது தங்கள் மீது விழுந்து விடுமோ என்று எண்ணியபோது, நாம் அவர்களை நோக்கி, "நாம் உங்களுக்குக் கொடுத்த (வேதத்)தைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; அதிலுள்ளவற்றைச் சிந்தியுங்கள்; நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம்" (என்று கூறினோம்).
172 உம் இறைவன் ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி, அவர்களைத் தங்களுக்கே சாட்சியாக வைத்து "நான் உங்களுடைய இறைவன் அல்லவா?" என்று கேட்டதற்கு, அவர்கள் "மெய் தான். நாங்கள் சாட்சி கூறுகிறோம்" என்று கூறியதை (அவர்களுக்கு) நினைவூட்டுவீராக (ஏனெனில் இது நினைவூட்டப்படாததனால்) நிச்சயமாக இதனை (மறந்து) விட்டுப் பராமுகமாக இருந்து விட்டோம் என்று மறுமை நாளில் நீங்கள் (யாருமே) சொல்லாதிருக்கவும்.
173 அல்லது, "இணைவைத்தவர்கள் எல்லாம் எங்களுக்கு முன் இருந்த எங்கள் மூதாதையர்களே நாங்களோ அவர்களுக்குப் பின் வந்த (அவர்களுடைய) சந்ததிகள் - அந்த வழிகெட்டோரின் செயலுக்காக நீ எங்களை அழித்து விடலாமா?" என்று கூறாதிருக்கவுமே! (இதனை நினைவூட்டுகிறோம் என்று நபியே! நீர் கூறுவீராக.)
174 அவர்கள் (பாவங்களிலிருந்து) விடுபட்டு (நம்மிடம்) திரும்புவதற்காக நாம் (நம்) வசனங்களை இவ்வாறு விளக்கிக் கூறுகின்றோம்.
175 (நபியே!) நீர் அவர்களுக்கு ஒரு மனிதனுடைய வரலாற்றை ஓதிக்காட்டுவீராக! அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்திருந்தோம்; எனினும் அவன் அவற்றை விட்டு முற்றிலும் நழுவிவிட்டான்; அப்போது அவனை ஷைத்தான் பின் தொடர்ந்தான் - அதனால் அவன் வழி தவறியவர்களில் ஒருவனாகி விட்டான்.
176 நாம் நாடியிருந்தால், நம் அத்தாட்சிகளைக் கொண்டு அவனை உயர்த்தியிருப்போம்; எனினும் அவன் இவ்வுலக வாழ்வை(யே சதமென) மதித்து, தன்னுடைய இச்சைகளையே பின்பற்றினான்; அவனுக்கு உதாரணம் நாயைப் போன்று, அதை நீர் விரட்டினாலும் நாக்கைத் தொங்க விடுகிறது, அல்லது அதை நீர் விட்டு விட்டாலும் நாக்கைத் தொங்க விடுகிறது - இதுவே நம் வசனங்களைப் பொய்யெனக் கூறும் கூட்டத்தாருக்கும் உதாரணமாகும் - ஆகவே அவர்கள் சிந்தித்து நல்லுணர்வு பெறும் பொருட்டு (இத்தகைய) வரலாறுகளைக் கூறுவீராக.
177 நம்முடைய வசனங்களைப் பொய்யெனக் கூறிய மக்களின் உதாரணம் மிகவும் கெட்டதாகும்; அவர்கள் தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டார்கள்.
178 அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டுகின்றானோ அவர் நேர்வழியை அடைந்தவர் ஆவார்;. யாரைத் தவறான வழியில் விட்டு விட்டானோ, அத்தகையவர்கள் முற்றிலும் நஷ்டம் அடைந்தவர்களே.
179 நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.
180 அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன் அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.
181 நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.
182 எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியா வண்ணம் பிடிப்போம்.
183 (இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.
184 அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.
185 வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?
186 எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.
187 அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; "அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்; அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும் பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக.
188 (நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நம்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை."
189 அவனே, உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவருடன் கூடி (இணைந்து) வாழ்வதற்காக அவருடைய துணைவியை (அவரிலிருந்தே) படைத்தான் - அவன் அவளை நெருங்கிய போது அவள் இலேசான கர்ப்பவதியானாள்; பின்பு அதனைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள்; பின்பு அது பளுவாகவே, அவர்களிருவரும் தம்மிருவரின் இறைவனிடம், "(இறைவனே!) எங்களுக்கு நீ நல்ல (சந்ததியைக்) கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்" என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.
190 அவர்களுக்கு (அவர்கள் விருப்பப்படி) நல்ல குழந்தையை அவன் கொடுத்தவுடன், அவர்களுக்கு அவன் கொடுத்ததில் அவ்விருவரும் அவனுக்கு இணைகளைக் கற்பிக்கின்றனர் - இவர்கள் இணை வைப்பதை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்."
191 எந்தப் பொருளையும் படைக்க இயலாதவற்றையா இவர்கள் (அல்லாஹ்வுக்கு) இணையாக்குகிறார்கள்? இன்னும், அவர்களோ (அல்லாஹ்வினாலேயே) படைக்கப்பட்டவர்களாயிற்றே!
192 அவர்கள் இவர்களுக்கு எத்தகைய உதவியும் செய்ய சக்தியற்றவர்களாக இருக்கின்றனர்; (அது மாத்திரமல்ல) அவர்கள் தமக்குத் தாமே உதவி செய்து கொள்ளவும் சக்தியற்றவர்கள்.
193 (இந்த முஷ்ரிக்குகளை) நீங்கள் நேர்வழிக்கு அழைத்தாலும், உங்களை அவர்கள் பின்பற்ற மாட்டார்கள்; நீங்கள் அவர்களை அழைப்பதும் அல்லது (அழையாது) வாய்மூடியிருப்பதும் உங்களுக்குச் சமமேயாகும்.
194 நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் - அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!
195 அவர்களுக்கு நடக்கக்கூடிய கால்கள் உண்டா? அல்லது அவர்களுக்கு பிடிப்பதற்குரிய கைகள் உண்டா? அல்லது அவர்களுக்குப் பார்க்கக் கூடிய கண்கள் உண்டா? அல்லது அவர்களுக்குக் கேட்கக் கூடிய காதுகள் உண்டா? (நபியே!) நீர் கூறும்; "நீங்கள் இணை வைத்து வணங்கும் (உங்கள்) தெய்வங்களை (எல்லாம்) அழைத்து, எனக்கு(த் தீங்கு செய்திட) சூழ்ச்சி செய்து பாருங்கள் - (இதில்) எனக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்காதீர்கள்" என்று.
196 "நிச்சயமாக என் பாதுகாவலன் அல்லாஹ்வே. அவனே வேதத்தை இறக்கி வைத்தான். அவனே நல்லடியார்களைப் பாதுகாப்பவன் ஆவான்.
197 அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள்.
198 நீங்கள் அவர்களை நேர் வழியின் பக்கம் அழைப்பீர்களானால், அவர்கள் கேட்கமாட்டார்கள். (நபியே!) அவர்கள் உம்மைப் பார்ப்பது போல் உமக்குத் தோன்றும்; ஆனால் அவர்கள் (உம்மைப்)பார்ப்பதில்லை.
199 எனினும் (நபியே) மன்னிப்பைக் கைக் கொள்வீராக! நன்மையைக் கடைபிடிக்குமாறு (மக்களை) ஏவுவீராக மேலும் அறிவீனர்களைப் புறக்கணித்து விடும்.
200 ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
201 நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்கு) அஞ்சுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானிலிருந்து தவறான எண்ணம் ஊசலாடினால், அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கின்றார்கள் - அவர்கள் திடீரென விழிப்படைந்து (ஷைத்தானின் சூழ்ச்சியைக்) காண்கிறார்கள்.
202 ஆனால் ஷைத்தான்களின் சதோதரர்களோ அவர்களை வழி கேட்டிலேயே இழுத்துச் செல்வார்கள் - அவர்கள் (பாவத்தின் பாதையிலான தம் முயற்சியில்) யாதொரு குறையும் செய்ய மாட்டார்கள்.
203 நீர் (அவர்களின் விருப்பப்படி) அவர்களிடம் ஓர் அத்தாட்சியைக் கொண்டு வராவிட்டால், "நீர் இந்த அத்தாட்சியை ஏன் கொண்டு வரவில்லை?" என்று கேட்பார்கள்; (நீர் கூறும்;) நான் பின்பற்றுவதெல்லாம் என் இறைவனிடமிருந்து எனக்கு அறிவிக்கப்படுவதைத்தான்; (திருக்குர்ஆன் ஆகிய) இது உங்கள் இறைவனிடமிருந்து வந்த அறிவொளியாகவும், நேர்வழியாகவும், நல்லருளாகவும் இருக்கின்றது - நம்பிக்கை கொண்ட மக்களுக்கு.
204 குர்ஆன் ஓதப்படும்போது அதனை நீங்கள் செவிதாழ்த்தி (கவனமாகக்) கேளுங்கள்; அப்பொழுது நிசப்தமாக இருங்கள் - (இதனால்) நீங்கள் கிருபை செய்யப்படுவீர்கள்.
205 (நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்.
206 எவர்கள் உமது இறைவனிடத்தில் (நெருங்கி) இருக்கிறார்களேர் அவர்கள் நிச்சயமாக பெருமை கொண்டு அவனை வணங்காமல் இருப்பதில்லை. மேலும் அவனுடைய (புகழைக் கூறித்) துதித்துக்கொண்டும், அவனுக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்து கொண்டும் இருக்கின்றனர்.